புதுப்பொலிவு பெறும் வளம் மீட்பு பூங்கா

கோத்தகிரி பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்காவை புதுப்பொலிவாக்கும் பணிகள் நடந்து வருகிறது.

Update: 2022-10-28 18:45 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்காவை புதுப்பொலிவாக்கும் பணிகள் நடந்து வருகிறது.

வளம் மீட்பு பூங்கா

கோத்தகிரி பேரூராட்சி வளம் மீட்பு பூங்கா குன்னூர் செல்லும் சாலையோரத்தில் உள்ளது. 4½ ஏக்கர் பரப்பளவு கொண்ட பூங்காவில், குப்பைகளை தரம் பிரிக்கும் கட்டிடம், மக்கும் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் மையம், பிளாஸ்டிக் குப்பைகளை அரைக்கும் எந்திரம், மாதிரி காய்கறி தோட்டம், பூந்தோட்டம் உள்ளன. 21 வார்டுகளில் இருந்து தினமும் சேகரமாகும் குப்பைகள் தரம் பிரித்து, மறு சுழற்சி செய்யப்படுகிறது.

இங்கு தயாரிக்கப்படும் இயற்கை உரம் குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் சிறு துகள்களாக அரைக்கப்பட்டு, சாலை போடும்போது தாருடன் கலப்பதற்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தநிலையில் தற்போது பூங்கா நுழைவுவாயில் மற்றும் குப்பைகளை அரைக்கும் கட்டிடத்தில் அழகிய பெயர் பலகைகள் பொருத்தப்பட்டு, அலங்கார வளைவு அமைக்கப்பட்டு உள்ளது.

தத்ரூப ஓவியங்கள்

மேலும் பூங்கா உள்புறம் நிழற்குடை மற்றும் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளதோடு, அங்கு பல்வேறு வண்ண மலர்கள் பூத்து குலுங்கி வருகிறது. மீன்கள் வளர்ப்பதற்கான தொட்டி கட்டும் பணி, வாத்து, முயல், கோழி வளர்ப்பதற்காக கூண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன.

பிளாஸ்டிக் கழிவு, டயர்களை கொண்டு மலர் செடிகள் வளர்ப்பதற்காக தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. சுவர்களில் வனவிலங்குகள் மற்றும் பறவைகளின் ஓவியங்கள் தத்ரூபமாக வரையப்பட்டது. இதன் மூலம் பூங்கா புதுப்பொலிவு பெற்று உள்ளது.

இதுகுறித்து கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் கூறும்போது, கோத்தகிரி வளம் மீட்பு பூங்காவில் குப்பைகள் அனைத்தும் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படுகிறது. பிற பேரூராட்சிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது. தற்போது பூங்காவில் 5 டன் இயற்கை உரம் தயார் செய்யப்பட்டு, கிலோ ரூ.10-க்கு விற்க தயாராக உள்ளது. மேலும் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் இடம் என்றாலே முகம் சுழிக்கும் நிலை மாறி, இந்த பூங்கா சுகாதரத்துடன், பசுமையான பூங்காவை போல காட்சியளிக்கிறது. மேலும் பணிகள் நடந்து வருகிறது என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்