குளங்களில் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

குளங்களில் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

Update: 2023-04-21 10:35 GMT

திருப்பூர்

அத்திக்கடவு-அவினாசி திட்ட குளங்களில் சீமை கருவேல மரங்களை அகற்றி நீர் விரையமாவதை தடுக்க வேண்டும் என்று சப்-கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

அத்திக்கடவு-அவினாசி திட்டம்

திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை தாங்கினார். திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், ஊத்துக்குளி தாலுகா பகுதியை சேர்ந்த விவசாயிகள் மனு கொடுத்து முறையிட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார்:-

60 ஆண்டு கால போராட்டத்தின் பயனாக தற்போது அத்திக்கடவு-அவினாசி திட்டம் மூலமாக ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த குளம், குட்டைகளில் அமைக்கப்பட்டுள்ள குழாய் மூலமாக தண்ணீர் அனுப்பி சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த திட்டத்துக்கு உட்பட்ட ஊத்துக்குளி, அவினாசி தாலுகாக்களில் உள்ள குளம், குட்டைகளில் சீமை கருவேல மரங்கள் மற்றும் முட்புதர்கள் நிரம்பி காட்சியளிக்கிறது. இந்த திட்டத்தின்படி குளத்துக்கு நீர் நிரப்பும்போது, விவசாயத்துக்கு பயன்படாமல் விரயமாகும் வாய்ப்பு உள்ளது. எனவே குளம், குட்டைகளில் உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும்.

நத்தம் நிலம்

பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நத்தம் நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யபடவில்லை என்றும், அரசு நிலம் என்பதால் பத்திரப்பதிவு செய்ய முடியாது என்றும் தெரிவித்து வருகிறார்கள். அதனால் நத்தம் நிலத்தில் மானாவாரி தோராயபட்டா, எச்.எஸ்.டி. பட்டா பெற்று குடியிருக்கும் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். மாவட்டத்தில் மற்ற பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் இதுபோல் சொல்லப்படுகிறது. நத்தம் அடங்கலில் உள்ள நிலங்கள் அரசு நிலம் என்று வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யப்படுவதில்லை. நத்தம் இனங்களில் பட்டா அரசால் வழங்கப்பட்ட இனங்களை பொறுத்து, உடனடியாக நில மதிப்பு செய்து பத்திரப்பதிவு செய்ய ஆவண செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஊத்துக்குளி கஸ்தூரிபாளையம் செல்லிபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி ராமசாமி பேசும்போது, 'சிறு விவசாயியான எனது நிலம் வழியாக 3 உயர்மின் கோபுரங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பக்கத்தில் பெரிய விவசாய தோட்டம் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்காமல், கூடுதலாக 3 கம்பங்கள் அமைத்து செலவை அரசுக்கு அதிகப்படுத்தியுள்ளனர். அதிகாரிகள் இதை ஆய்வு செய்து நேர்வழியில் உயர்மின்பாதை அமைக்க வேண்டும்' என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்