உரம் -பூச்சி கொல்லி மருந்துகளின் மீதான ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும்; வேளாண் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகளின் மீதான ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும் என்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2022-06-24 21:45 GMT

ஈரோடு:

உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகளின் மீதான ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும் என்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

நீர் நிர்வாகம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா தலைமை தாங்கி, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அதைத்தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் உள்ள விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பேசினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-

பவானிசாகர் அணையில், காவிரி தீர்ப்புக்கு புறம்பான நீர் நிர்வாகத்தை நீர்வளத்துறை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. இதனால் 16 போக கடலை சாகுபடி, 8 போக நெல் சாகுபடியை விவசாயிகள் இழந்துள்ளோம். எனவே கோர்ட்டு உத்தரவின்படி நீர் நிர்வாகத்தை அமல்படுத்த வேண்டும்.

நீர்நிலை ஆக்கிரமிப்பு

மேட்டூர் வலதுகரை பாசனத்துக்கு வழக்கம்போல் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி தண்ணீர் திறக்கவேண்டும். அதற்கு முன்பாக வாய்க்காலில் உள்ள மதகுகள், கிளை வாய்க்கால்களை மராமத்து செய்ய வேண்டும். நவீன தொழில்நுட்பங்களை மேம்படுத்தி விவசாயிகளின் பட்டா மாறுதல் உள்ளிட்ட பிரச்சினைகளை விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சொட்டு நீர் பாசனத்துக்கான மானியத்தொகை உடனடியாக விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீர் நிலை ஆக்கிரமிப்புகள் சம்பந்தமாக ஆய்வு மேற்கொள்ள விரைவில் குழு அமைத்து அரசு உத்தரவை அமல்படுத்த வேண்டும்.

ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும்

உரங்கள் மீது விதிக்கப்படும் 5 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியையும் (ஜி.எஸ்.டி.), பூச்சி கொல்லி மருந்துகளின் மீது விதிக்கப்படும் 18 சதவீத வரியையும் நீக்க வேண்டும்.

மரவள்ளி மற்றும் மஞ்சளுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். கால்நடை தீவனங்களின் விலை உயர்ந்து விட்டதால், உடனடியாக பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.20 உயர்த்த வேண்டும்.

சின்னப்புலியூர் பகுதியில் ஒரு தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழில்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அங்குள்ள ஓடையின் வழியாக பவானி ஆற்றில் கலக்கிறது. இதனால் சின்னப்புலியூர், பெரியபுலியூர், வைரமங்கலம், எலவமலை ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபட்டு விவசாயம் முற்றிலும் அழியும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே அந்த தொழிற்சாலையை இயக்க நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்.

கான்கிரீட் தளம்

கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் கொள்முதல் செய்யும்போது பாலின் தரத்தை கணக்கிட்டு விலை நிர்ணயிக்கப்படுகிறது. பின்னர் பால் குளிரூட்டும் நிலையத்தில் தரம் குறைவாக இருப்பதாக கூறி லிட்டருக்கு ரூ.3 வரை குறைக்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கும், கூட்டுறவு சங்க அலுவலர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்படுகிறது. எனவே இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கக்கூடாது.

இவ்வாறு விவசாய சங்க பிரதிநிதிகள் கூறினார்கள்.

ஆக்கிரமிப்பு

அதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா பேசும்போது, 'உயர்மின் கோபுரங்கள் அமைந்துள்ள இடங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க மின் தொடரமைப்பு கழகத்துடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

தற்போது வரை 53 ஹெக்டர் நிலப்பரப்பில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளன. பட்டா மாறுதலில் பெரும்பாலும் வீட்டுமனை பட்டாதான் நிலுவையில் உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் 18 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் 7 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் குளிர்சாதன கிடங்கு வசதிகள் உள்ளன. இதை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்' என்றார்.

கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகேசன், செயற்பொறியாளர் விஸ்வநாதன், துணை இயக்குனர்கள் தமிழ்செல்வி, சண்முக சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்