பொது இடங்களில் தேங்கும் தண்ணீரை அகற்றும் பணி
கூடலூர் பகுதியில் தொடர் மழையால் பொது இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதனை அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.;
கூடலூர்
கூடலூர் பகுதியில் தொடர் மழையால் பொது இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதனை அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
தொடர் மழை
கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று காலை முதல் சிறிது நேரம் வெயில் தென்பட்டது. தொடர்ந்து 9 மணிக்கு பிறகு மழை பெய்ய தொடங்கியது. இதனால் கடுங்குளிர் நிலவியது. அப்போது மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடி பள்ளிக்கூடம் சென்றனர். இந்தநிலையில் தொடர் மழையால் கூடலூர் நகராட்சி பகுதியில் உள்ள பொது இடங்கள் மற்றும் வாய்க்கால்களில் தண்ணீர் தேங்கியது.
தூர்வாரும் பணி
இதைத்தொடர்ந்து நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் தண்ணீரை அகற்றும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை சரி செய்து மழைநீர் சீராக செல்லும் வகையில் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் சாலை மற்றும் அதன் ஓரத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல இடையூறாக தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றுவதற்கான பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, தொடர் மழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகாமல் இருக்க வாய்க்கால்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றனர்.