போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த நடைபாதை கடைகள் அகற்றம்
போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த நடைபாதை கடைகள் அகற்றப்பட்டன.;
சிவகாசி,
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக நடைபாதை கடைகள் அமைக்க கூடாது என்றும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் உரிய அனுமதி பெற்று நடைப்பாதை கடைகள் அமைத்து கொள்ளலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. இதை பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அளவில் வரவேற்றனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சிவகாசி பஜாரில் தீபாவளி விற்பனை நடந்து வரும் நிலையில் மாநகராட்சி நிர்வாகத்தின் அறிவிப்பை மீறி சிலர் நடைபாதையில் கடைகளை வைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகார்களின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை முக்கிய இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றினர். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அதிகாரிகள் நடைபாதை கடைகளை அகற்றுவதை நிறுத்தவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மாநகராட்சிக்கு சொந்தமான வானங்களில் ஏற்றி சென்றனர். இதேபோல் விதிகளை மீறி சாலையில் நிறுத்தப்பட்ட கனரக வானங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் 5 வாகன உரிமையாளர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.