சாலையோர கடைகள், தள்ளுவண்டிகள் அகற்றம்
சாலையோர கடைகள், தள்ளுவண்டிகள் அகற்றப்பட்டன.
திருச்சி மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரங்களில் பயன்படுத்தப்படாத பழைய வாகனங்கள், தள்ளுவண்டிகள், கடைகள் உள்ளன. இந்நிலையில் அவற்றை மாநகராட்சி சார்பில் அகற்றும் பணி நேற்று காலை நடந்தது. இதில் மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் தலைமையில் உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் வினோத்கண்ணா, இளநிலை பொறியாளர் பாவா பக்ருதீன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஏராளமான ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். இதில் திருச்சி ஜங்ஷன், மத்திய பஸ் நிலையம் பகுதி, கோரிமேடு, கலெக்டர் அலுவலக சாலை மற்றும் கண்டோன்மெண்ட் பகுதிகளில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டிகள், கடைகள், பயன்பாட்டில் இல்லாத கம்பங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அப்புறப்படுத்தினர்.