சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

குளித்தலையில் நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டபோது, அதிகாரிகள் பாரபட்சமாக செயல்பட்டதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

Update: 2022-09-09 18:23 GMT

அறிவிப்பு

குளித்தலை நகரப்பகுதிக்கு உட்பட்ட சுங்ககேட் முதல் பெரியபாலம் பகுதி வரையில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று குளித்தலை நெடுஞ்சாலைத்துறை மூலம் கடை உரிமையாளர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து கரூர்- திருச்சி மாநில நெடுஞ்சாலையில் குளித்தலை சுங்ககேட் முதல் பெரியபாலம் வரை நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட உள்ளதாகவும், இப்பணிகள் உரிய பாதுகாப்புடன் நடைபெற பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு மற்றும் கோட்டாட்சியருக்கு குளித்தலை நெடுஞ்சாலை துறை அதிகாரி மூலம் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்த நெடுஞ்சாலை துறையின் உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமரன் முன்னிலையில், குளித்தலை பஸ் நிலையம் பகுதியில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று தொடங்கப்பட்டது.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒலிபெருக்கி மூலம் கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதிகாரிகளின் அறிவுரையின் பேரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. குளித்தலை பஸ் நிலையம் பகுதியில் உள்ள கழிவுநீர் செல்லும் வாய்க்காலின் மேல் பகுதி வரை பலர் ஆக்கிரமிப்பு செய்து தங்களது கடைகளை நடத்தி வந்தனர். தற்போது கழிவுநீர் வாய்க்காலின் மேல் போடப்பட்டிருந்த சிமெண்டு பலகை அகற்றப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை மூலம் புதிய கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி மேற்கொள்ள பின்வரும் காலங்களில் உரிய மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அகற்றப்பட்டுள்ள இடத்தில் மீண்டும் கடை உரிமையாளர்கள் ஆக்கிரமிப்பு செய்யும் பட்சத்தில் அந்த கடை உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு அவர்கள் மீது போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

கேள்வி எழுப்பினர்

குளித்தலை பகுதியில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டபோது சிலர் தங்கள் கடை முன்பு செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்ததாகவும், அந்தக்கடை உரிமையாளர்களுக்கு மட்டும் அதிகாரிகள் அவகாசம் கொடுத்து பாரபட்சமாக செயல்பட்டு உள்ளார்கள் என்று மற்ற கடை உரிமையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதிகாரிகள் சென்ற பிறகு மீண்டும் அவர்கள் தங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தங்களது கடைகளை நடத்தி வருவதாகவும், இதனால் மற்ற கடைக்காரர்களுக்கு அவர்கள் தவறான முன்னுதாரணமாக இருப்பதால் அதிகாரிகள் எந்த ஒரு பாரபட்சம் இன்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இல்லையெனில் மற்ற கடைக்காரர்களும், அதிகாரிகளின் உத்தரவை அலட்சியப்படுத்தும் வகையில் செயல்படக்கூடும் என முறையிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்