சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்
பழனி உழவர்சந்தை பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
பழனி உழவர்சந்தையில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைவித்த காய்கறி, பழங்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் உழவர்சந்தையின் முன்பகுதியில் சாலையோரத்தில் காய்கறி, மளிகை, பழக்கடை என ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைக்காரர்கள் சாலையோரத்தை ஆக்கிரமித்து உள்ளதாகவும், இதனால் உழவர்சந்தைக்கு வரும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களை நிறுத்த முடியாத நிலை ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில் நேற்று, நகராட்சி சார்பில் உழவர்சந்தை பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. அப்போது நகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் கொண்டு கடைகளின் முன்பு ஆக்கிரமித்து அமைத்திருந்த மேற்கூரை மற்றும் பொருட்களை அகற்றினர். இதற்கிடையே ஒருசில கடைக்காரர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்பை அகற்றி கொண்டனர்.
இதற்கிடையே உழவர்சந்தை சாலையோர பகுதியில் முழுமையாக ஆக்கிரமிப்பு அகற்றம் செய்ய வேண்டும் என்றும், இனிவருங்காலத்தில் சாலையோரத்தை ஆக்கிரமிக்காத வகையில் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.