சாலையோரத்தில் கொட்டப்பட்டிருந்த இளநீர் கூடுகள் அகற்றம்

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக சாலையோரத்தில் கொட்டப்பட்டிருந்த இளநீர் கூடுகள் அகற்றப்பட்டது.

Update: 2023-06-11 21:18 GMT

கும்பகோணம்:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக சாலையோரத்தில் கொட்டப்பட்டிருந்த இளநீர் கூடுகள் அகற்றப்பட்டது.

எச்சரிக்கை பலகை

கும்பகோணம் பகுதியில் கொற்கை ஊராட்சி உள்ளது. இந்த கொற்கை ஊராட்சி மெயின் ரோட்டில் காளிமுத்து நகர் அருகே உள்ள சாலையோரத்தில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு வந்தன. இதனை தடுக்கும் விதமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொற்கை ஊராட்சி சார்பில் அந்த பகுதியில் எச்சரிக்கை பலகையை வைத்து உள்ளனர். அதில் அங்கு குப்பைகளை கொட்டக்கூடாது. மீறினால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.ஆனால் இதை பொருட்படுத்தாமல் பலர் கொற்கை மெயின் ரோடு சாலையோரத்தில் குப்பைகள், இறைச்சி கழிவுகளை கொட்டி வந்தனர்.

குவிந்த கிடந்த இளநீர் ஓடுகள்

குறிப்பாக சிலர் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் இளநீர் கூடுகளை மொத்தமாக சாலையோரத்தில் கொட்டி சென்றிருந்தனர். இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வந்தனர்.

இளநீர் கூடுகள் சாலையின் வளைவு பகுதியில் குவிந்து கிடப்பதை அறியாமல் இரவு நேரங்களில் வருபவர்கள் இளநீர் கூடுகளால் விபத்தில் சிக்கிக் கொள்ளும் அபாயமும் ஏற்பட்டது. இதுகுறித்து"தினத்தந்தி" நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

அகற்றம்

இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலையோரத்தில் கிடந்த இளநீர் கூடுகளை அகற்றியுள்ளனர். மேலும், அந்த பகுதியில் குவிந்திருந்த செடி, கொடிகளையும் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள், செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்