'தினத்தந்தி' செய்தி எதிரொலி: விருத்தாசலம் மணிமுக்தா ஆற்றின் கரையில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்

விருத்தாசலம் மணிமுக்தா ஆற்றின் கரையில் குவிந்து கிடந்த குப்பைகள் ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியின் காரணமாக அகற்றப்பட்டன.;

Update: 2022-09-22 18:45 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் நகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்காக, வடவாடி அருகே குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபகாலமாக துப்புரவு பணியாளர்கள் அந்த கிடங்கில் குப்பைகளை கொட்டாமல், பாலக்கரை பாலத்தின் கீழ் மணிமுக்தா ஆற்றின் கரையிலும், விருத்தாசலம்-பெண்ணாடம் சாலையில் சித்தலூர் சுடுகாடு அருகே என நகரில் ஆங்காங்கே குப்பைகளை கொட்டி தீ வைத்து கொளுத்தி வந்தனர். இதனால் விருத்தாசலம் நகரம் முழுவதும் காலை நேரத்தில் புகை மண்டலம் சூழ்ந்திருந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் தினசரி மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்தனர்.

அகற்றம்

இதுதொடர்பாக நேற்று வெளியான 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் செய்தி பிரசுரமானது. அதன் அடிப்படையில் நகர்மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், மணிமுக்தாற்றின் பாலத்தின் கீழ் பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றிட துப்புரவு பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் 50-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் அங்கு குவிந்து கிடந்த குப்பைகள் அனைத்தையும் அள்ளி, அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது அங்கு வந்து தூய்மை பணியை பார்வையிட்ட டாக்டர் சங்கவி முருகதாஸ், ஆற்றங்கரை பகுதிகளில் பொதுமக்கள், வியாபாரிகள் குப்பை கழிவுகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது நகராட்சி ஆணையாளர் சேகர், துப்புரவு அலுவலர் பூபதி, துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். இதற்கிடையே விருத்தாசலம் பகுதியில் குவிந்து கிடந்த குப்பைகளை உடனடியாக அகற்ற காரணமாக இருந்த தினத்தந்தி நாளிதழுக்கு பொதுமக்கள் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்