விநாயகர் கோவில் அகற்றம்
பூதப்பாண்டி அருகே விநாயகர் கோவில் இடித்து அகற்றப்பட்டது. இதையொட்டி சாலை மறியலுக்கு முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டி அருகே விநாயகர் கோவில் இடித்து அகற்றப்பட்டது. இதையொட்டி சாலை மறியலுக்கு முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
விநாயகர் கோவில்
பூதப்பாண்டி அருகே உள்ள தடிக்காரன்கோணம் பகுதியில் முச்சந்தி செல்வ விநாயகர் கோவில் இருந்தது. இந்த கோவில் சாலையோரத்தில் அமைந்து இருந்ததால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாகவும், எனவே அதனை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று தனி நபர் ஒருவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கோவிலை அகற்ற உத்தரவிட்டார்.
எதிர்ப்பு
அதைத்தொடர்ந்து 2 மாதங்களுக்கு முன்பு கோவிலை அகற்ற தோவாளை தாலுகா தாசில்தார் தாஸ் தலைமையில் நெடுஞ்சாலைத்துறையினர் வந்தனர். அப்போது கோவிலில் உள்ள விநாயகர் சிலையை வைக்க இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று இந்து அமைப்பினர் கோரிக்கை வைத்து, கோவிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கோவிலை அகற்றாமல் அதிகாரிகள் திரும்பிச்சென்றனர்
அதைத்தொடர்ந்து தாசில்தார் தலைமையில் அந்த பகுதி மக்களுடன் இரு முறை பேச்சுவார்த்தை நடந்தது.
பேச்சுவார்த்தை
இந்த நிலையில் நேற்று காலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் மற்றும் தோவாளை தாசில்தார் தாஸ், துணை தாசில்தார் ஆறுமுகம், வருவாய் அலுவலர் கோமளா, கிராம நிர்வாக அலுவலர் சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் வென்ஸி, உதவி பொறியாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் பொக்லைன் எந்திரத்துடன் கோவிலை அகற்ற வந்தனர்.
அப்போது தோவாளை மேற்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் மகாதேவன் பிள்ளை மற்றும் இந்து முன்னணி கோட்ட செயலாளர் சோமன், விஷ்வ இந்து பரிஷத்தின் மாநில இணைச்செயலாளர் காளியப்பன், அய்யப்ப சேவா சமாஜ மாவட்ட அமைப்பாளர் நாஞ்சில் ராஜா மற்றும் ஊராட்சி முன்னாள் தலைவர் ஜெயராம் ஆகியோர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அகற்றம்
அப்போது கோவிலில் உள்ள விநாயகர் சிலையை எடுத்து தனியார் நிலத்தில் பிரதிஷ்டை செய்வது என முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து விநாயகர் சிலையை இந்து அமைப்பினர் எடுத்து அருகில் உள்ள ஒரு தனியார் நிலத்தில் பிரதிஷ்டை செய்தனர்.
அதன்பிறகு பொக்லைன் எந்திரம் மூலம் கோவில் இடித்து அகற்றப்பட்டது.
சாலை மறியலுக்கு முயற்சி
இந்தநிலையில் விநாயகர் சிலையை தனியார் நிலத்தில் பிரதிஷ்டை செய்வதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது தடிக்காரன்கோணம் ஊராட்சி தலைவர் பிராங்கிளின் தலைமையில் சிலர் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். உடனே போலீசார் சாலை மறியலில் ஈடுபட முயன்ற 11 பேரை கைது செய்து பஸ்சில் ஏற்றி குலசேகரம் கொண்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மாலையில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
கோவில் இடிக்கப்பட்டதையொட்டி அந்த பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்களுடன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.