3 இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தஞ்சை மாநகராட்சி பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக 3 இடங்களில் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

Update: 2022-08-23 20:51 GMT
தஞ்சை மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளுமாறு மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு பகுதியிலும் பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறார்கள்.

இவ்வாறு அகற்றப்படாத இடத்தில் மாநகராட்சி அதிகாரிகள் கடந்த சில நாட்களாக ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் பூக்காரத்தெரு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. நேற்று காலை தஞ்சை கீழவாசல் வண்டிப்பேட்டை பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றுமாறு கடைக்காரர்களை வலியுறுத்தினர்.

90 கடைகளில் அகற்றம்

அதன்படி அந்த பகுதியில் உள்ள கடைக்காரர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஒரு சில கடைகளில் முன்பு போடப்பட்டு இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் பொக்லின் எந்திரம் உதவியுடன் அகற்றினர். 90 கடைகளில் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவின்பேரில், உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் மேற்பார்வையில் உதவி பொறியாளர்கள் கண்ணதாசன், பாபு, ஆறுமுகம், மகேந்திரன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதேபோல காவேரி நகர் பகுதிகளிலும், கரந்தை பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.


Tags:    

மேலும் செய்திகள்