ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பலவன்சாத்துக்குப்பம் ஏரிக்கரையோரம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

Update: 2023-02-13 18:02 GMT

வேலூரை அடுத்த பலவன்சாத்துகுப்பம் ஏரிக்கரை மற்றும் அதனையொட்டிய தரிசு நிலம் என்று ஒரு ஏக்கர் அரசு இடத்தை 3 பேர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். அந்த இடத்தில் ஒருவர் மாட்டு கொட்டகையும் மற்ற இருவரும் இரும்பு கம்பி மூலம் வேலி அமைத்திருந்தனர்.

இதுகுறித்து அப்பகுதிமக்கள் வருவாய்த்துறையினருக்கு புகார் தெரிவித்தனர். அதன்பேரில் வேலூர் தாசில்தார் செந்தில் மற்றும் வருவாய்த்துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரசு இடத்தை 3 பேரும் ஆக்கிரமிப்பு செய்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து வருவாயத்்துறையினர், அவர்களிடம் ஆக்கிரமிப்பை உடனடியாக தாங்களே அகற்ற வேண்டும். இல்லையென்றால் விரைவில் ஆக்கிரமிப்பு இடித்து அகற்றப்படும் என்று தெரிவித்தனர். சில நாட்கள் அவகாசம் வழங்கியும் அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. இதையடுத்து தாசில்தார் செந்தில் தலைமையில் தலைமையிடத்து துணைதாசில்தார் உதயகுமார் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரம் மூலம் மாட்டு கொட்டகை, இரும்பு வேலியை இடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்க பாகாயம் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்