வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
சிவகங்கை இளையான்குடி ரோட்டில் கீழ்பாத்தி கண்மாய் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் இந்த தண்ணீரை வைத்து விவசாயம் செய்கிறார்கள். அண்ணாமலை நகர் பகுதியில் இந்த கண்மாய்க்கு தண்ணீர் வரும் வரத்து கால்வாய்கள் நீண்ட நாட்களாக ஆக்கிரமிப்பில் இருந்தன. இதைத்தொடர்ந்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நீர்வளத்துறை சருகணையாறு வடிநில துணை கோட்ட உதவி செயற்பொறியாளர் சாந்தி தேவி, உதவி பொறியாளர்கள் முத்துராமலிங்கம், அமுதசுரபி, கண்ணன், சம்பத்குமார், சிவகங்கை வட்டாட்சியர் தங்கமணி, நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதையொட்டி அந்த பகுதியில் கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தி வரத்து கால்வாயை ஆழப்படுத்தினார்கள்.