திண்டுக்கல் சந்தைபேட்டையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திண்டுக்கல் சந்தைபேட்டையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் சாலைகள் குறுகி கொண்டே செல்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மாநகராட்சியின் நகரமைப்பு ஆய்வாளர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு வாரந்தோறும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று திண்டுக்கல் நாகல்நகர் சந்தைபேட்டை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது.
இதையொட்டி பொக்லைன் எந்திரத்துடன் வந்த மாநகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அதிரடியாக இடித்து அகற்றினர். அப்போது சாக்கடை கால்வாய்களுக்கு மேல் பகுதிகளில் இருந்த கடைகள், கடைகளின் சுவர்கள், சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட மேற்கூரைகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இதற்கு ஒருசில வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே போலீசார் தலையிட்டு சமாதானம் செய்தனர். அப்போது மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.