ஜீயபுரம்:
முக்கொம்பு அருகில் உள்ள திருப்பராய்த்துறை காவிரி ஆற்றின் கரையோரம் 6 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து, பல ஆண்டு காலமாக குடியிருந்து வந்தனர். இந்த நிலையில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் அப்பகுதியை தண்ணீர் அதிக அளவில் சூழ்ந்து கொள்ளும். அப்போது அந்த குடும்பங்களை சேர்ந்தவர்களை பாதுகாப்பான இடங்களில், வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி துறையை சேர்ந்த அதிகாரிகள் தங்க வைப்பார்கள்.
இந்நிலையில் அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. இதையடுத்து அப்பகுதியில் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதையொட்டி ஜீயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சாலையில் குடியிருந்தவர்கள், ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.