வேலூர் லாங்குபஜாரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
வேலூர் லாங்கு பஜாரில் ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
வேலூர் லாங்கு பஜாரில் ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வேலூர் நேதாஜி மார்க்கெட்டை ஒட்டிள்ள லாங்கு பஜார் பகுதி முக்கிய வணிக தலமாக திகழ்கிறது. இங்கு வரும் பொதுமக்கள் பலர் சாலைகளில் வாகனத்தை நிறுத்தி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் ஆக்கிரமிப்பு செய்து தள்ளுவண்டி கடைகள் வைத்துள்ளதாகவும், கடைக்காரர்களும் நடைபாதையை ஆக்கிரமித்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தது. இந்த நிலையில் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் உத்தரவின் பேரில் 2-வது மண்டல உதவி பொறியாளர் வெங்கடேசன், சுகாதார அலுவலர் லூர்துசாமி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று லாங்கு பஜார், மண்டி தெரு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். சாலையோர ஆக்கிரப்புகள் பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டது. மேலும் கேட்பாரற்று கிடந்த மற்றும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டிக் கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி லாரியில் ஏற்றி சென்றனர். 10-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பரபரப்பு
மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றுவதை கண்ட வியாபாரிகள் பலர் தங்களது இருசக்கர வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகளை அங்கிருந்து தள்ளிக்கொண்டு வேகமாக ஓட்டம் பிடித்தனர்.
மேலும் லாங்குபஜார் பகுதியில் நடைமேடைகளில் ஆக்கிரமித்து வைத்திருந்த பொருட்களை வியாபாரிகள், உடனடியாக அப்புறப்படுத்தினர். இதனால் மண்டித் தெரு, லாங்கு பஜார் பகுதி நடைபாதை பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் அகலமாக காணப்பட்டது. அங்கு பொதுமக்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் செல்ல முடிந்தது.
ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.