ரெயில்வே மேம்பாலத்தில் கான்கிரீட் தடுப்புகள் அகற்றம்
பொதுமக்கள் போராட்டம் எதிரொலியாக, திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ரெயில்வே மேம்பாலத்தில் வைக்கப்பட்ட கான்கிரீட் தடுப்புகளின் ஒரு பகுதி அகற்றப்பட்டது.
ரெயில்வே மேம்பாலம்
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் சென்னை, கரூர், பழனி ஆகிய 3 ரெயில்வே பாதைகள் உள்ளன. இந்த ரெயில் பாதைகளில் அடிக்கடி ரெயில்கள் சென்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் 3 ரெயில்வே கேட்களையும் கடந்து செல்ல நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.
3 ரெயில் பாதைகளையும் பொதுமக்கள் எளிதில் கடந்து செல்லும் வகையில் அப்பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் கட்டுமான பணிகள் 100 சதவீதம் நிறைவடையவில்லை. பாலத்தின் மைய பகுதியில் கட்டுமான பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இதனால் பாலம் இன்னும் திறக்கப்படவில்லை. இருப்பினும் மேம்பாலத்தின் வழியாக பஸ்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்பட அனைத்து வாகனங்களும் சென்று வந்தன.
வாகன ஓட்டிகள் அவதி
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் மேம்பாலத்தில் வாகனங்கள் செல்லாத வகையில் கான்கிரீட் தடுப்புகள் பாலத்தில் உள்ள சாலையின் குறுக்கே வைக்கப்பட்டன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
பின்னர் இரவில் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்லும் வகையில் ஒரு கான்கிரீட் தடுப்பு அகற்றப்பட்டது. அதனால் இரு சக்கர வாகனங்கள் மட்டும் பாலத்தின் வழியாக சென்று வந்தன.
இந்தநிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் பொக்லைன் எந்திரத்துடன் பொதுமக்கள் சிலர் பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலத்துக்கு வந்தனர். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த கான்கிரீட் தடுப்புகளை அகற்ற முயன்றனர்.
பொதுமக்கள் போராட்டம்
இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வடக்கு போலீசார் விரைந்து வந்து பொதுமக்களை தடுத்தனர். இதையடுத்து அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாலத்தில் வைக்கப்பட்ட தடுப்புகளை அகற்றாமல் அங்கிருந்து செல்ல மாட்டோம் என்று கூறி அதிகாரிகளுடனும், போலீசாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மேம்பால கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை மோட்டார் சைக்கிள்கள், கார்கள் செல்லும் அளவுக்கு கான்கிரீட் தடுப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அனுமதித்துள்ளதாக தெரிவித்தார்.
தடுப்புகள் அகற்றம்
இதில் பொதுமக்கள் சமாதானமடைந்ததையடுத்து, பொக்லைன் எந்திரம் மூலம் மேம்பாலத்தில் வைக்கப்பட்டிருந்த 3 கான்கிரீட் தடுப்புகள் அப்புறப்படுத்தப்பட்டன. அதன் பின்னர் அந்த வழியாக மோட்டார் சைக்கிள்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லத்தொடங்கின. பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.