போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பேனர்கள் அகற்றம்

சிவகாசியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பேனர்கள் அகற்றப்பட்டன.

Update: 2023-04-22 19:09 GMT

சிவகாசி, 

சிவகாசியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பேனர்கள் அகற்றப்பட்டன.

போக்குவரத்திற்கு இடையூறு

தமிழகம் முழுவதும் பொது இடங்களில் பேனர் வைக்க அரசு தடை விதித்துள்ள நிலையில் சிவகாசியில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனை அகற்ற கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாநகராட்சி கமிஷனராக சங்கரன் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவர் தினமும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் சுகாதார பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அவ்வாறு ஆய்வு பணிகள் மேற்கொள்ளும் போது நகரின் பல இடங்களில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக பேனர்கள் வைக்கப்பட்டிருந்த குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது.

நடவடிக்கை

இந்தநிலையில் நகரில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து சுகாதார பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் நேற்று ராட்சத பேனர்கள் அகற்றப்பட்டது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பேனர்கள் வைக்க அனுமதியில்லாத நிலையில் சிலர் தடைகளை மீறி பேனர்களை வைத்திருந்தனர். அதனை ஊழியர்கள் மூலம் அகற்றப்பட்டது. இனி வரும் காலங்களில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பேனர்களை வைக்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்