கோவை
கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் 25 ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
கடைகள் ஆக்கிரமிப்பு
கோவை காந்திபுரத்தில் மத்திய பஸ் நிலையம், டவுன் பஸ் நிலையம், அரசு விரைவு பஸ்கள் பஸ் நிலையம் என்று 3 பஸ் நிலையங்கள் உள்ளன. இந்த பஸ் நிலையங்களுக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து பஸ் ஏறி செல்கிறார்கள்.
இதில் டவுன் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகளவில் இருந்தன. குறிப்பாக பயணிகள் நடந்து செல்லும் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைத்து இருந்ததால் பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர். எனவே இந்த பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளருக்கு பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
நோட்டீஸ் வினியோகம்
இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், டவுன் பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற சம்பந்தப்பட்ட கடைகளுக்கு நோட்டீசும் கொடுக்கப்பட்டது.
ஆனால் அறிவித்த தேதியில் சம்பந்தப்பட்ட நபர்கள் கடைகளை அகற்றவில்லை. இந்த நிலையில் கோவை மத்திய மண்டல உதவி ஆணையாளர் மகேஷ் மேற்பார்வையில் மாநகராட்சி அதிகாரிகள் காந்திபுரம் டவுன் பஸ் நிலையம் சென்றனர்.
கடைகள் அகற்றம்
அதுபோன்று ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற பொக்லைன் எந்திரமும் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினார்கள். இதில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த செல்போன் கடைகள், பால் கடை, செருப்பு கடை உள்ளிட்ட கடைகள் அகற்றப்பட்டன.
அதுபோன்று அங்கு ஏற்கனவே கட்டப்பட்டு இருந்த கடைகள் முன்பு நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த பொருட்களும் அகற்றப்பட்டன. சில இடத்தில் சுவர்கள் கட்டப்பட்டு இருந்தன. அவையும் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டன.
கடும் நடவடிக்கை
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த 25 கடைகள் அகற்றப்பட்டு உள்ளன. அத்துடன் நடைபாதையில் இனிமேல் ஆக்கிரமித்து கடைகளை வைப்பதை தடுக்க தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை தொடரும். யாராவது ஆக்கிரமித்து கடைகள் வைத்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.