பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நாளை அறவழி போராட்டம்; எஸ்.டி.பி.ஐ.யின் மாநில தலைவர் பேட்டி

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நாளை அறவழி போராட்டம் நடத்தப்படும் என எஸ்.டி.பி.ஐ.யின் மாநில தலைவர் பேட்டி அளித்துள்ளார்.

Update: 2022-12-04 19:15 GMT

பெரம்பலூரில், மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6 அன்று (நாளை செவ்வாய்க்கிழமை) பாசிச எதிர்ப்பு தினமாக அனுசரித்து நாடு முழுவதும் அறவழி போராட்டத்தை நடத்துகிறோம். ஜனநாயக அடிப்படையில் நடத்தப்பட்ட அநீதிக்கு, நீதி வேண்டி இப்போராட்டம் நடைபெறுகிறது. தமிழக கவர்னர் மறைமுகமாக அரசுக்கு இணையாக ஒரு இணை அரசாட்சியை நடத்தி கொண்டிருக்கிறார். மிகப்பெரிய குழப்பங்களை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார். தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிகளில் நிறைவேற்றப்பட்ட 66 சட்ட மசோதாக்களுக்கு இதுவரை ஒப்புதல் வழங்காமல் மாபெரும் ஜனநாயக படுகொலையை நடத்தி கொண்டிருக்கிறார். கவர்னரின் இந்த நடவடிக்கையை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தமிழக மக்களின் நலனுக்காக, ஏழரை கோடி மக்களின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவைக்கு எதிராக செயல்படும் கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து கவர்னர் தமிழ் மீது பற்று இருப்பது போல் காட்டி கொள்கிறார். இதைப்பார்த்து தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நீதியரசர் அருணா ஜெகதீசன் அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றம் புரிந்த 17 காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது இதுவரை சட்டரீதியான நடவடிக்கை இல்லை. குற்றம் சாட்டப்பட்ட அரசு அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ளது. இது தி.மு.க. அரசின் இரட்டை நிலையை காட்டுகிறது. தூத்துக்குடியில் நடைபெற்ற மாபெரும் படுகொலைக்கு காரணமான, குற்றம் புரிந்த அனைத்து அதிகாரிகளும் சட்டப்படி பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்