மத போதகர் போக்சோவில் கைது

கோவை அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-04 15:30 GMT

பேரூர்

கோவை அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மத போதகர்

கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (வயது 53). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். ஸ்டீபன் ராஜ் கிறிஸ்தவ மத போதகராக உள்ளார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் கோவையை சேர்ந்த 15 வயது சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது சிறுமியின் தாய், தந்தை வியாபாரம் தொடர்பாக வெளியே சென்று விட்டனர். மேலும் சிறுமியின் பாட்டியும் கடைக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் சிறுமி மற்றும் அவருடைய தங்கைகள், தம்பி இருந்துள்ளனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை

இந்த நிலையில் மத போதகர் ஸ்டீபன் ராஜ் அந்த 15 வயது சிறுமியை வீட்டின் வெளியே வரவழைத்தார். பின்னர் திடீரென சிறுமியின் தங்கையை மற்றும் தம்பியை வீட்டில் உள்ள அறையில் வைத்து பூட்டினார். இதையடுத்து ஸ்டீபன் ராஜ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத சிறுமி அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார்.

சிறுமியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். அப்போது சிறுமி அழுது கொண்டே, நடந்தது குறித்து அவர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் ஸ்டீபன் ராஜை பிடித்து செட்டிபாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.

போக்சோவில் கைது

இந்த வழக்கு போக்சோ தொடர்பான வழக்கு என்பதால் இதனை பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் மாற்றினர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஸ்டீபன்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கோவையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்