வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்-யூனியன் தலைவர் பிர்லா கணேசன் பேச்சு

தேவகோட்டை வட்டாரத்தில் வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று யூனியன் கூட்டத்தில் தலைவர் பிர்லா கணேசன் கருத்து தெரிவித்தார்.

Update: 2023-01-27 19:06 GMT

தேவகோட்டை,

தேவகோட்டை வட்டாரத்தில் வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று யூனியன் கூட்டத்தில் தலைவர் பிர்லா கணேசன் கருத்து தெரிவித்தார்.

யூனியன் கூட்டம்

தேவகோட்டை யூனியன் மாதாந்திர கூட்டம் அதன் தலைவர் பிர்லா கணேசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கவுன்சிலர் நாகனி செந்தில்குமார், துணைத்தலைவர் ராஜாத்தி நடராஜன், ஆணையாளர் மாலதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுத்துக்கொண்டு நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தலைவர் பிர்லா கணேசன் பேசியதாவது:-

தேவகோட்டை வட்டார பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு வறட்சியை சந்தித்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆங்காங்கே சிலர் ஆழ்குழாய் கிணறு மூலம் விவசாயம் செய்து வரும் சிறு பகுதியை அரசும், இன்சூரன்ஸ் நிறுவனங்களும் கணக்கில் எடுத்து கொள்ளக்கூடாது. ஒவ்வொரு கிராமங்களிலும் எந்த அளவுக்கு பாதிப்பு என்பதை கணக்குகள் எடுத்து அதற்கு ஏற்ப விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

இனி அரசு எடுக்கும் கணக்கில் கிராம வாரியாக மாற்றம் கொண்டுவர வேண்டும். மேலும் இந்த ஆண்டு ஏற்பட்டிருக்க கூடிய பெரும் பாதிப்பை கணக்கில் கொண்டு முழு இன்சூரன்ஸ் தொகையை அரசு வழங்க வேண்டும்.கடந்தாண்டு வழங்க வேண்டிய இன்சூரன்ஸ் தொகை இன்னும் வழங்கப்படவில்லை.அதை அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஊக்குவிக்காமல் அரசு இன்சூரன்ஸ் நிறுவனங்களை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிவாரண தொகை

மாவட்ட கவுன்சிலர் நாகனி செந்தில்குமார் கூறும் போது, தேவகோட்டை வட்டாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே நமது மாவட்ட அமைச்சர் மற்றும் கலெக்டர் மூலம் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயன் கிடைக்க அனைவரும் இணைந்து வலியுறுத்துவோம் என்றார்.

நாகனி ரவி தி.மு.க. கவுன்சிலர்:- கிராமப்புறங்களில் வீடுகள் இல்லாத ஏழை எளியவர்களுக்கு வீடுகளை பெறுவதில் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இதனால் எதுவுமே இல்லாத ஏழைகள் பாதிக்கப்படுகின்றனர்.எனவே அதை தளர்த்தி உண்மையான ஏழைகளுக்கு வீடுகள் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர், யூனியன் என்ஜினீயர்கள் திருமேனிநாதன், ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்