கோடை மழையால் பருத்தி பாதிப்பு விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் -எடப்பாடி பழனிசாமி
கோடை மழையால் பருத்தி பயிர் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழையினால் பருத்தி, எள் மற்றும் நிலக்கடலை போன்ற பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, பருத்தி மற்றும் எள் சாகுபடி செய்திருந்த நிலங்களில் மழை நீர் தேங்கி அப்பயிர்களின் வேர்கள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், பருத்தி மற்றும் எள் பயிரிட்டு இருந்த டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு முழுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், ஓரிரு நாட்களில் தமிழகத்தில் புயல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் தமிழகம் முழுவதும், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இக்கோடை மழையினால் டெல்டா மாவட்டங்களில் சுமார் 1 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த பருத்தி மற்றும் 20 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த எள் போன்ற பயிர்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.
அதிகாரிகள், அமைச்சர் செல்லவில்லை
குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல், மன்னார்குடி, நன்னிலம், நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், வலங்கைமான், கூத்தாநல்லூர் என அனைத்து தாலுகாக்களிலும் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் பருத்தி மற்றும் 10 ஆயிரம் ஏக்கரில் எள் பயிரிடப்பட்டு உள்ளதாகவும், பயிர்கள் நன்கு விளைந்து மகசூல் எடுக்க வேண்டிய நேரத்தில் கோடை மழையினால் பயிர்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் விவசாயிகளுக்கு முழுவதுமாக பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த சேதத்தை பார்வையிடுவதற்கோ, பாதிப்பை கணக்கிடுவதற்கோ, வேளாண் துறை அதிகாரிகளோ, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரோ இதுவரை இம்மாவட்டங்களுக்கு வரவில்லை என்று விவசாயிகள் தெரிவித்து உள்ளனர். எனவே, இந்த கோடை மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி மற்றும் எள் பயிரிடப்பட்ட திருவாரூர், தஞ்சை, நாகப்பட்டினம் போன்ற டெல்டா மாவட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும்; பயிர் பாதிப்பை முழுமையாக கணக்கெடுக்க வேண்டும் என்றும்; சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும் வெள்ள பாதிப்புகளை பார்வையிட அனுப்பி வைக்க வேண்டும் என்றும், இந்த விடியா தி.மு.க. அரசின் முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன்.
ரூ.50 ஆயிரம் நிவாரணம்
ஒரு ஏக்கர் பருத்தி பயிரிட சுமார் ரூ.50 ஆயிரம் செலவாகிறது என்றும், எள் பயிரிட ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் செலவாகிறது என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் முழுமையாக கணக்கெடுத்து, கோடை மழையினால் பாதிக்கப்பட்ட ஒரு ஏக்கர் பருத்தி பயிருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும்; ஒரு ஏக்கர் எள் பயிருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும், இந்த தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.