விரகாலூர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கல்

விரகாலூர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாவட்ட கலெக்டர் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கினார்.

Update: 2023-10-10 18:36 GMT

அரியலூர் மாவட்டம் வெற்றியூர் ஊராட்சி, விரகாலூர் கிராமத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார். அதில் காயமடைந்த மற்றும் படுகாயமடைந்தவர்களை நேற்று முன்தினம் அரியலூர் மற்றும் தஞ்சாவூர்அரசு மருத்துவமனைகளில் அமைச்சர்கள் சி.வி.கணேசன், சிவசங்கர் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து காசோலை வழங்கினார்கள். இந்நிலையில் நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு காசோலை வழங்கும் நிகழ்வு நடந்தது. இதில் விரகாலூர் கிராமத்தை சேர்ந்த ரவி, சிவகாமி, வெண்ணிலா ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலையை அளித்து கலெக்டர் ஆறுதல் தெரிவித்தார். அப்போது வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் இளங்கோவன், வட்டாட்சியர் கண்ணன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்