நிவாரண முகாம்களை தயார் செய்ய வேண்டும்

தென்மேற்கு பருவமழையையொட்டி நிவாரண முகாம்களை தயார் செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தினார்.

Update: 2023-05-07 01:30 GMT

ஊட்டி

தென்மேற்கு பருவமழையையொட்டி நிவாரண முகாம்களை தயார் செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தினார்.

ஆய்வு கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள காரணத்தினால், மழை மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், சாலைகளில் விழும் மரங்கள் மற்றும் மண் சரிவை உடனடியாக சரிசெய்ய வேண்டும். இதற்காக மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் போதுமான பொக்லைன் எந்திரம், பவர்ஷா ஆகியவற்றையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவக்குழுவினர், மருந்து இருப்பு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

உணவு பொருட்கள்

மின்வாரியம் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் போன்ற மின் சாதனங்கள் ஏதேனும் பேரிடர் ஏற்படும் நேரத்தில் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க போதுமான பணியாளர்களுடன் தயாராக இருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மாவட்ட வழங்கல் துறை மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் பொதுமக்களுக்கு தேவையான உணவு பொருட்களை கூடுதலாக இருப்பு வைக்க வேண்டும். பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் முதல்நிலை மீட்பாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். கண்காணிப்பு அலுவலர்கள் முன்கூட்டியே மிக அபாயகரமான பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.

மணல் மூட்டைகள்

மழையினால் பயிர்களுக்கு சேதம் ஏதேனும் ஏற்படின், அதனை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக கணக்கெடுக்க வேண்டும். அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் நல்ல நிலையில் உள்ளனவா எனவும், பள்ளியின் மேற்கூரையில் உள்ள குப்பைகள் மற்றும் செடிகள் ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக அகற்ற வேண்டும். மண் சரிவு ஏற்படும் பகுதிகளின் அருகில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் வைத்திருக்க வேண்டும். அபாயகரமான பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் கருப்பசாமி, ஆர்.டி.ஓ.க்கள் துரைசாமி, முகம்மது குதுரதுல்லா, பூஷணகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்