வடமாநில தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மதுரையில் மழையால் வாழ்வாதாரத்தை இழந்து வடமாநில தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-10-12 08:19 GMT

மதுரை,

மதுரையில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழை காரணமாக மாட்டுத்தாவணி தல்லாகுளம் ஆணையூர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.

இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாட்டுத்தாவணி பகுதியில் மழை நீர்‌ சூழ்ந்ததால் வடமாநில தொழிலாளர்கள் குடியிருப்புகள் தண்ணீரில் தத்தளித்தது. இதனால் அவர்களது தயாரிப்புகளான பொம்மை மற்றும் சாமி சிலைகள் சேதம் அடைந்தன. வாழ்வாதாரத்தை இழந்து தவித்த வடமாநில தொழிலாளர்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று நேரில் சந்தித்து பேசினார். அவர்களுக்கு தேவையான அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது,

மதுரையில் பெய்து ஒரு கன மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . போதிய முன்னேற்பாடுகளை அரசு செய்யவில்லை .

நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்படவில்லை. எனவே அரசு விரைந்து செயல்பட்டு உரிய முகாம்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.

சமீபத்தில் பெய்த ஒரு மணி நேர மழைக்கே சென்னை தாக்கு பிடிக்க முடியவில்லை. எனவே வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்க வேண்டும்.

மேலும் மதுரையில் மழை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு உதவிடும் வகையில் அரசு அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்