தரமற்ற பொருட்களை வாங்கி பொதுமக்கள் ஏமாந்தால் நுகர்வோர் கோர்ட்டுகளை அணுகி நிவாரணம் பெறலாம் கலெக்டர் தகவல்

பொதுமக்கள் தரமற்ற பொருட்களை வாங்கி ஏமாந்தால் நுகர்வோர் கோர்ட்டுகளை முறையாக அணுகி நிவாரணம் பெறலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2023-03-29 18:45 GMT

சிவகங்கை

பொதுமக்கள் தரமற்ற பொருட்களை வாங்கி ஏமாந்தால் நுகர்வோர் கோர்ட்டுகளை முறையாக அணுகி நிவாரணம் பெறலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.

உலக நுகர்வோர் தினம் விழா

சிவகங்கை கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் தேசிய மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், கலெக்டர் பேசியதாவது:

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி நுகர்வோருக்கு உரிமைகளும், கடமைகளும் தரப்பட்டுள்ளன. பொருட்களை வாங்குபவர்கள் அதில் குறைகள் இருந்தால் புகார் அளிக்கவும் மற்றும் நிவாரணம் பெறுவதற்கும் அரசால் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. தேவைகளை அறிந்து பொருட்களை வாங்கும் ஒவ்வொருவரும் நுகர்வோர்களாவர். மக்கள் விழிப்புணர்வுடன் பொருட்களை வாங்கும் போது, பொருட்களின் தரம், எடை மற்றும் உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்கள் ஏதும் இருக்கிறதா என்பதை அறிந்து வாங்கிட வேண்டும். தரமற்ற, எடைக்குறைவு மற்றும் போலியான பொருட்களை வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். மேலும், தரமுத்திரையினை பார்த்து பொருட்களை வாங்கிட வேண்டும். எந்தவித தகவலும் அச்சிடப்படாத பொட்டல பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

நுகர்வோர் நீதிமன்றம்

பழங்கள் வாங்கும் போது மெழுகு பூச்சு இல்லாத, ரசாயனம் கலக்காத பழங்களை விழிப்புணர்வுடன் வாங்கி பயன்படுத்திட வேண்டும். மேலும், நாம் வாங்கும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களில் காலாவதி தேதி, சரியான விலை, அங்கீகரிக்கப்பட்ட முத்திரை உள்ளிட்ட விவரங்களை கவனமுடன் சரிபார்த்து வாங்கிட வேண்டும் .வாடிக்கையாளர்களாகிய பொதுமக்கள் ஏதேனும் தரமற்ற பொருட்களை எதிர்பாராதவிதமாக வாங்கி ஏமாற்றப்பட்டால், அதற்கென நுகர்வோர் நீதிமன்றங்களை முறையாக அணுகியும், மேலும், தரமற்ற பொருட்கள் மட்டுமன்றி, ஏதேனும் சேவைகள் மூலமும் ஏமாற்றப்பட்டால் அதற்கென சட்டமுறைகளை அணுகியும் நிவாரணம் பெறலாம் இவ்வாறு அவர் கூறினார்

பின்னர் மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்பட்டு வரும், குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களிடையே நடைபெற்ற பேச்சு, கவிதை, கட்டுரை, மற்றும் ஓவியம் போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், உதவி ஆணையர் (தொழிலாளர் நலத்துறை) ராஜ்குமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் நஜிமுன்னிசா, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் பிரபாவதி, துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழக பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்