வறட்சி காலத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கியது அ.தி.மு.க. அரசு தான்-செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேச்சு

வறட்சி காலத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கியது அ.தி.மு.க. அரசு தான் என்று செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2023-01-22 18:45 GMT

தேவகோட்டை

வறட்சி காலத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கியது அ.தி.மு.க. அரசு தான் என்று செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கூறினார்.

பொதுக்கூட்டம்

காரைக்குடி தொகுதி அ.தி.மு.க. சார்பில் தேவகோட்டை ஆர்ச் உள்புறம் உள்ள அண்ணா அரங்கில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், நகர செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் சிங்கமுத்து, மதுரை தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிவகங்கை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

விவசாயிகளுக்கு நிவாரணம்

கருவறை முதல் கல்லறை வரை சிறப்பான திட்டங்களை அ.தி.மு.க. அரசு கொண்டு வந்து செயல்படுத்தியது. அதேபோல் குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்து அனைத்து கால்வாய், ஏரி, குளங்கள், கண்மாய்களை சீரமைத்து மழை காலங்களில் மழைநீா் சேமிக்கப்படுவதால் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். அதேபோல் வறட்சி காலங்களில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.அரசு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கியது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அ.தி.மு.க. செயல்படுத்திய தாலிக்கு தங்கம் திட்டம், விலையில்லா மடிக்கணினி, பெண்களுக்கு மானிய இருசக்கர வாகனம் ஆகிய திட்டங்களை செயல்படுத்தவில்லை.

மேலும் மக்கள் திட்டங்கள் எதையும் தி.மு.க. அரசு செய்யவில்லை இதனால் ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

வாரிசு அரசியல்

கூட்டத்தில் திரைப்பட நடிகர் சிங்கமுத்து பேசுகையில், தி.மு.க. வாரிசு அரசியலை ஊக்கப்படுத்தி வருகிறது. வரும் காலங்களில் ஒரே குடும்பத்தினர் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் நிலை வரும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும். அந்த சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் நின்று வெற்றி பெறும் என்றார்.

கூட்டத்தில் தேவகோட்டை யூனியன் தலைவர் பிர்லா கணேசன், துணைத்தலைவர் நடராஜன், கண்டதேவி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் தேவகோட்டை தெற்கு தசரதன், வடக்கு முருகன், கண்ணங்குடி தெற்கு பெரியசாமி, வடக்கு சரவணன், காரைக்குடி நகர் செயலாளர் மெய்யப்பன், தேவகோட்டை நகர்மன்ற துணைத்தலைவர் ரமேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முடிவில் மாவட்ட பேரவை இணைச்செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்