மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்றாவது ரீச் பகுதிகளுக்கு விவசாய பணிகளுக்காக மணிமுத்தாறு அணையில் இருந்துதண்ணீர் திறந்து விட வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2022-12-22 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்றாவது ரீச் பகுதிகளுக்கு விவசாய பணிகளுக்காக மணிமுத்தாறு அணையில் இருந்துதண்ணீர் திறந்து விட வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமை தாங்கினார். மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) சாந்திராணி, உதவி கலெக்டர்கள் மகாலட்சுமி (கோவில்பட்டி), புகாரி (திருச்செந்தூர்), தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், கோரம்பள்ளம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் முத்துராணி, கூட்டுறவு இணைப்பதிவாளர் முத்துக்குமாரசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நாச்சியார் அம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவசாயிகள் கோரிக்கை

கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், மணிமுத்தாறு அணையில் இருந்து 3-வது ரீச் பகுதிகளுக்கு விவசாய பணிகளுக்காக தண்ணீர் திறக்க வேண்டும். மோசடி புகாரில் சிக்கி முடக்கப்பட்டுள்ள குரும்பூர் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் விவசாயிகள் முதலீடு செய்த பணம் எப்போது திருப்பி கொடுக்கப்படும். பணம் கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விளாத்திகுளம் வட்டத்தில் 2020- 21-ல் மிளகாய் பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை கிடைக்கப்பெறாமல் முழுமையாக விடுபட்டு உள்ளது. விவசாயிகளுக்கு விரைவாக பயிர் காப்பீடு தொகை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையேல் தொடர் போராட்டங்களை நடத்துவோம் என்று கூறினர்.

மணிமுத்தாறு தண்ணீர்

கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் பதில் அளித்து பேசும் போது, மணிமுத்தாறு அணையில் நீர் இருப்பு 90 அடியை தாண்டினால் தான் தண்ணீர் திறக்க வேண்டும் என விதிமுறை உள்ளது.

எனவே, அணையின் நீர் இருப்பு 90 அடியை தாண்டியதும் உடனடியாக 3, 4-வது ரீச்சில் தண்ணீர் திறக்கப்படும். இதற்கான அரசாணை ஏற்கனவே பெறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு உபரியாக நீர் இருந்ததால், 3, 4-வது ரீச்சுக்கு தண்ணீர் திறக்க உரிமை இல்லாத போதிலும், தண்ணீர் விடப்பட்டது. குரும்பூர் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் முதலீடு செய்தவர்களின் பணத்தை திருப்பி கொடுக்க ரூ.17 கோடி கேட்டு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது.

இதனை அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே விரைவில் முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப கிடைக்கும், என்று கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்