மருதூர் அணையில் இருந்து சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறப்பு

மருதூர் அணையில் இருந்து சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் உடன்குடி, சாத்தான்குளம் பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-11-16 18:45 GMT

உடன்குடி:

மருதூர் அணையில் இருந்து சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் உடன்குடி, சாத்தான்குளம் பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சடையனேரி கால்வாய்

உடன்குடி, சாத்தான்குளம் பகுதியில் நிலத்தடி நீரை பாதுகாப்பதிலும், விவசாய நிலங்களில் கடல் நீர் ஊடுருவாமல் தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பது சடையனேரி கால்வாய்.

மேலும், இக்கால்வாய் மூலம் தான் இப்பகுதியில் உள்ள சிறிய குளங்கள், ஊரணிகள், கண்மாய்கள் மற்றும் கருமேனி ஆறு ஆகியவற்றுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

மருதூர் அணையில் இருந்து மேலகால்வாயில் திறந்து விடப்படும் தாமிரபரணி ஆற்று தண்ணீர், சடையனேரி கால்வாய் மூலம் சாத்தான்குளம், உடன்குடி, மெஞ்ஞானபுரம், நாசரேத் பகுதிக்கு வருகிறது.

தற்போது தொடர்ந்து பருவ மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள குளங்கள், கண்மாய்களில் சிறிதளவு தண்ணீர் தேங்கியுள்ளது.

தண்ணீர் திறப்பு

இந்த நிலையில் மருதூர் அணையில் இருந்து சடையனேரி கால்வாயில் தற்போது தாமிரபரணி ஆற்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இக்கால்வாய் மூலம் சாத்தான்குளம், உடன்குடி பகுதி குளங்களுக்கு தண்ணீர் ெசல்கிறது.

இன்னும் சில நாட்கள் கால்வாயில் தண்ணீர் விடப்பட்டால் குளங்கள், கண்மாய்கள் நிரம்புவதற்கு வாய்ப்புள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதுடன், விவசாய நிலங்களில் கடல்நீர் ஊடுருவாமலும் தடுக்கப்படும் என கூறப்படுகிறது.

கூடுதல் தண்ணீர் திறக்க நடவடிக்கை

இது குறித்து தாமிரபரணி ஆறுவடிநில கோட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது மழை காலம் தொடங்கியுள்ளது. இன்னும் மழைகாலம் முடியும் முன் சடையனேரி கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டு, சாத்தான்குளம், உடன்குடி, மெஞ்ஞானபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து குளங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தற்போது ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் சற்று குறைவான தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் தண்ணீரின் அளவு கூடும் போது, கால்வாயில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும்.

விவசாயிகள் மகிழ்ச்சி

இந்த கால்வாய் தண்ணீர் வாணியங்கால்விளை, நங்கை மொழி, வேப்பங்காடு வழியாக சடையநேரி குளத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இக்குளம் முழுவதுமாக நிரம்பியவுடன், சுற்றுப்புற பகுதியில் உள்ள அனைத்து குளங்களையும் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார். சடையநேரி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பது பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்