மழை வெள்ளத்தால் பழுதான வாகனங்களை பழுது பார்ப்பது தொடர்பாக கட்டணமில்லா தொலைபேசி எண்கள் வெளியீடு

கனமழை வெள்ளத்தால் 2, 3 மற்றும் 4 சக்கர வாகனங்கள் பழுதடைந்துள்ளன.

Update: 2023-12-10 13:01 GMT

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மிக்ஜம் புயலினால் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் வெள்ளம் தேங்கியிருந்த பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2, 3 மற்றும் 4 சக்கர வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவ்வாகனங்களுக்கு பழுது நீக்கம் செய்யவும், உரிய இழப்பீடு வழங்கவும் வாகனத் தயாரிப்பு, நிறுவனங்கள், டீலர்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுடன் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், (08.12.2023) அன்று நிதிஅமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் வாகனத்தயாரிப்பு நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட கூட்டத்திலும் உடனடியாக அறிவுரைகள் வழங்கப்பட்டன.

அதன்படி அனைத்துவாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் சர்வீஸ் சென்டர்கள் மற்றும் டீலர்களின் சர்வீஸ் சென்டர்கள் அனைத்தும் உடனடியாக செயல்பாட்டிற்க்கு கொண்டு வரப்பட்டு பழுது நீக்கப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. வெள்ளத்தில் மூழ்கியிருந்த வாகனங்களை எக்காரணம் கொண்டும் இயக்க வேண்டாம் எனவும் அவற்றின் என்ஜினை ஆன் செய்யாமல் மீட்பு வாகனங்களில் சர்வீஸ் சென்டர்களுக்கு கொண்டுவருமாறும் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் இருந்த வாகன உரிமையாளர்களின் அலைபேசி எண்களுக்கு தயாரிப்பு நிறுவனங்கள் அவர்களின் முகவர்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் சார்பில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகளும், வாட்ஸ்ஆப் செய்திகளில் அனுப்பப்பட்டுள்ளன.

சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து தொடர்புடைய நிறுவனங்கள் விரிவான பத்திரிக்கைச் செய்திகளையும் வெளியிட்டு வருகின்றன. வாகன உரிமையாளர்கள் எளிதில் தொடர்புகொள்ள இலவச எண்கள மற்றும் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய சாலையோர உதவி வசதிகளையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

சென்னையில் மழை பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் டிசம்பர் 18 வரையில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் நிறுவனம் சென்னை முழுவதிலும் 68 இடங்களில் சிறப்பு முகாம்களை நடத்திவருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

Tags:    

மேலும் செய்திகள்