கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 1.14 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு
காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. தொடர் கனமழையால் காவிரி, ஹேமாவதி, பத்ரா துங்கபத்ரா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது.
நேற்று மதியம் நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 71,413 நீர் வந்து கொண்டிருக்கிறது. கபினி அணைக்கு வினாடிக்கு 33,643 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த இருஅணைகளில் இருந்தும் திறந்துவிடப்பட்ட நீர் திருமகூடலு திருவேணி சங்கமத்தில் ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் வருகிறது.
இதன்படி நேற்று கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து மொத்தம் தமிழகத்திற்கு ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 654 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.