வாலிபரின் வீட்டுக்கு தீ வைத்த உறவினர்கள்

வந்தவாசி அருகே கல்லூரி மாயமானதால் வாலிபரின் வீட்டுக்கு அவரது உறவினர்கள் தீ வைத்தனர்.

Update: 2023-02-18 12:29 GMT

வந்தவாசி

வந்தவாசி அருகே கல்லூரி மாயமானதால் வாலிபரின் வீட்டுக்கு அவரது உறவினர்கள் தீ வைத்தனர்.

கல்லூரி மாணவி மாயம்

வந்தவாசி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயது மாணவி. இவர் வந்தவாசியில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் தோட்டத்துக்குச் சென்று பார்த்த போது மாணவி அங்கு இல்லை. பின்னர் எங்கு தேடியும் மாணவி கிடைக்கவில்லை.

வந்தவாசியை அடுத்த வீரம்பாக்கம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் தங்களது மகளுடன் பேசி வந்த நிலையில் அவர் கடத்திச் சென்றிருக்கலாம் என கருதி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர்.

வீட்டுக்கு தீ வைப்பு

அப்போது அந்த வாலிபர் வீட்டில் இல்லாததால் சந்தேகம் அடைந்த அவர்கள் அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது சரியான தகவல் கூறவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் உறவினர்கள் அவர்களுடன் தகராறு செய்தனர். பின்னர் வாலிபரின் குடிசை வீட்டுக்கு திடீரென தீ வைத்ததாக கூறப்படுகிறது.

அப்போது மாணவியின் உறவினர்களில் சிலர் உடனே தீயை அணைத்தனர். அதற்குள் வீடு முழுவதும் தீ பரவியதால் அக்கம் பக்கத்தினர் வந்தவாசி வடக்கு போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று தகராறில் ஈடுபட்ட அனைவரையும் தடுத்து நிறுத்தினர். மேலும் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்