தொழிலாளர்களை மீட்கக்கோரி உறவினர்கள் கலெக்டரிடம் மனு

குவைத் நாட்டில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்களை மீட்கக்கோரி உறவினர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

Update: 2022-10-10 18:45 GMT

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 275 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இதில் கீழநத்தம் கிராம மக்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் 69 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு, அதன் பயனாளிகள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் 25 ஆண்டுகளுக்கு மேலான சிதிலமடைந்த தொகுப்பு வீடுகளை சரி செய்ய ரூ.50 ஆயிரமத்திற்கு தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வீட்டின் உரிமையாளர்களுக் வேலை செய்ய ஆணை வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வழங்கப்பட்ட அந்த உத்தரவையடுத்து வீட்டின் உரிமையாளர்கள் கடன் வாங்கி சரி செய்துள்ளனர். ஆனால் ஓராண்டு ஆகியும் அதற்கான தொகை ரூ.50 ஆயிரம் இன்னும் வழங்கப்படவில்லை. இது குறித்து பலரிடம் முறையிட்டும், மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லை. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தனர்.

நடவடிக்கை எடுக்கவில்லை

தா.பமூர் கிராமத்தை சேர்ந்த அதியமான் அளித்த மனுவில், தனக்கு கூத்தங்குடி கிராமத்தில் 4 ஏக்கர் நஞ்சை நிலம் உள்ளது. இதற்கு பொன்னாறு வாய்க்கால் மூலமாக தண்ணீர் வருவது வழக்கம். வாய்க்கால் மூலம் சுமார் 20 ஏக்கர் நிலங்கள் பயன்பட்டு வந்தன. இந்நிலையில் வாய்க்கால் பாதையை முள்வேலி போட்டு சிலர் அடைத்துள்ளனர். இது தொடர்பாக மதனத்தூர் பாசன பிரிவு அதிகாரிகளிடமும், தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர், உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 5, 12, 19, 26-ந் தேதிகளில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களிலும், மாவட்ட கலெக்டரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் விளைபயிர்கள் சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.ஒரு லட்சம் இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

குவைத் நாட்டில் தவிப்பு

அஸ்தினாபுரம் உள்பட 4 கிராமத்தை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரில் உள்ள ஒருவர் மூலம் அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் கிராமத்தை சேர்ந்த கலையரசன், தத்தனூர் கிராமத்தை சேர்ந்த இளவரசன், நல்லநாயக்கபுரம் கிராமத்தை சேர்ந்த அசோக் மருவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் ஆகியோர் குவைத்தில் கம்பிகட்டு வேலைக்கு 24 மாதம் வேலை என கூறியதன் பேரில் கடந்த மாதம் 12-ந் தேதி குவைத் நாட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் 3 மாதம் விசிட்டிங் விஷா எனவும், மேலும் 24 மாதம் விஷா எனவும் சம்பளம் மாதம் ரூ.40 ஆயிரம் என கூறியுள்ளனர். இதனை நம்பி தலா ரூ.ஒரு லட்சத்து 30 ஆயிரம் என 4 பேரும் குவைத் நாட்டிக்கு வேலைக்காக சென்றுள்ளனர். அவர்கள் சென்று ஒருமாதத்தில் விசிட்டர் விஷா முடிவடைந்தது‌. இதனையடுத்து சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு வேலை கொடுக்காமல் ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தங்களின் நிலை குறித்து குவைத்நாட்டிலிருந்து வீடியோ எடுத்து அனுப்பியுள்ள அவர்கள், தாங்கள் இங்கு உணவு கிடைக்காமல் பசியும், பட்டினியுமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்களை உடனடியாக தமிழ்நாட்டிக்கு மீட்டு வர வேண்டும். மேலும் குவைத்நாட்டிலிருந்து அவர்களை அழைத்துவருவதுடன், கட்டிய பணத்தை திரும்ப பெற்றுத்தரும்படியும் கோரிக்கை வைத்துள்ளனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் தொடர்ந்து வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கும் பணியில் ஈடுபட்டு 100 சதவீத பணியை முடித்த ஆறு வாக்கு சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் 20 கிராம நிர்வாக அலுவலர்களுக்கும், 16 கிராம உதவியாளர்களுக்கும், 9 சத்துணவு அமைப்பாளர்களுக்கும், 24 சங்கன்வாடி பணியாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்