குமரி கடற்கரை கிராமங்களில் உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள் அஞ்சலி

ஆறாத வடுவை ஏற்படுத்திய சுனாமி நினைவு தினத்தையொட்டி குமரி கடற்கரை கிராமங்களில் உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-12-26 20:28 GMT

குளச்சல், 

ஆறாத வடுவை ஏற்படுத்திய சுனாமி நினைவு தினத்தையொட்டி குமரி கடற்கரை கிராமங்களில் உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

சுனாமி ஏற்படுத்திய ஆறாத வடு

இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் கடந்த 2004-ம் ஆண்டும் நவம்பர் மாதம் 26-ந் தேதி கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உருவான சுனாமி பேரலை கடற்கரை கிராமங்களை சின்னாபின்னமாக்கியது.

எங்கு பார்த்தாலும் மரண ஓல குரல் போட்டது. அந்த அளவுக்கு உடல்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. ஆயிரக்கணக்கான மீனவர்களை சுனாமி பேரலை காவு வாங்கியது. அந்த சமயத்தில் சுனாமி தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், குமரி மாவட்டத்திலும் கடும் உயிர் சேதம் ஏற்பட்டது. குமரி மாவட்டத்தில் மணக்குடி, குளச்சல், கொட்டில்பாடு உள்ளிட்ட கடற்கரை பகுதியில் சுனாமி ஏற்படுத்திய தாக்கம் இன்னும் நீங்காத வடுவாக உள்ளது.

18-ம் ஆண்டு நினைவு தினம்

இந்தநிலையில் நேற்று 18-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி கடற்கரை கிராமங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், மவுன ஊர்வலமும் நடந்தது.

சுனாமி தாக்குதலில் கொட்டில்பாட்டில் மட்டும் 199 பேர் பலியானார்கள். அவர்கள் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் அங்கு நினைவு ஸ்தூபியும் எழுப்பப்பட்டுள்ளது.

நினைவு தினத்தையொட்டி சுனாமி காலனியான குழந்தை ஏசு காலனியில் இருந்து இறந்தவர்களின் நினைவாக மவுன ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் சுனாமி நினைவு ஸ்தூபிக்கு வந்தது.

மலர் அஞ்சலி

அங்கு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர். அப்போது மீனவர்களை பறிகொடுத்த உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர் இறந்தவர்கள் நினைவாக கொட்டில்பாடு புனித அலெக்ஸ் ஆலயத்தில் நினைவு திருப்பலி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கொட்டில்பாடு புனித அலெக்ஸ் ஆலய பங்கு தந்தை ராஜ், பங்குத்தந்தைகள் சர்ச்சில், ஏசுதாஸ், ஜின்டோ மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் குமரி மாவட்ட ஜவான்ஸ் அமைப்பினரும் பங்கேற்றனர்.

மணக்குடி

இதேபோல் மணக்குடி புனித அந்திரேயா ஆலயத்தில் பங்குத்தந்தை அந்தோணியப்பன், இணை பங்கு தந்தை சுவீட்டன் தலைமையில் சுனாமி பேரலையால் இறந்தவர்களின் நினைவாக சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

பின்னர் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 500-க் கும் மேற்பட்டோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி சுனாமியால் இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அங்கு இறந்தவர்களின் நினைவாக உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறினர். மேலும் சுனாமி நினைவு தினத்தையொட்டி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்