தனியார் பஸ்சை சிறைபிடித்து உறவினர்கள் போராட்டம்

அறந்தாங்கி அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி தனியார் பஸ்சை சிறைபிடித்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-22 19:17 GMT

தொழிலாளி படுகாயம்

அறந்தாங்கி அருகே சிலாத்தனி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 50), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 15-ந் தேதி கட்டுமாவடி சென்றுவிட்டு அன்று மாலை சொந்த ஊருக்கு தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். பின்னர் தனது ஊர் வந்ததும் பஸ்சில் இருந்து கீழே இறங்க முயற்சி செய்துள்ளார். அப்போது பஸ்சை நிறுத்தாமல் டிரைவர் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதில் கணேசன் நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து, படுகாயம் அடைந்த கணேசனை அப்பகுதி மக்கள் மீ்ட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

பஸ் சிறைபிடிப்பு

இந்தநிலையில், தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் கணேசனின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், விபத்துக்கு காரணமான டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட தனியார் பஸ்சை கணேசனின் உறவினர்கள் நேற்று சிறைபிடித்து அறந்தாங்கி- கட்டுமாவடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாகுடி, அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அந்த பஸ்சை விடுவித்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்