பெண்ணை தங்களுடன் அனுப்பக்கோரி உறவினர்கள் சாலை மறியல்

காதல் திருமணம் செய்த பெண்ணை தங்களுடன் அனுப்பக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2023-07-05 18:45 GMT

காதல் திருமணம் செய்த பெண்ணை தங்களுடன் அனுப்பக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காதல் திருமணம்

மயிலாடுதுறையில் செல்போன் கடை வைத்திருப்பவர் ரிக்கப் சந்த். இவரது மகள் 19 வயது நிறைவடைந்தவர். இவருக்கும் மயிலாடுதுறையை சேர்ந்த தற்போது காரைக்காலில் வசித்து வரும் பாலச்சந்தர்( வயது 20) என்ற புகைப்பட கலைஞரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டில் தெரிந்துள்ளது. இதையடுத்து ரிக்கப் சந்தின் மகள் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி பாலச்சந்தரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.இது குறித்து பெண்ணின் குடும்பத்தினர் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்திற்கு காதல் ஜோடிகள் வந்தனர். அப்போது ஜோடிகள் இருவரும் தாங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்ததோடு அந்தப் பெண் தனது கணவரோடு தான் செல்வேன் என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

34 பேர் கைது

இதனை கேட்ட பெண்ணின் உறவினர்கள் தற்போது பெண்ணின் திருமண வயது 21 என்று சட்ட திருத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் பெண்ணை தங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் போலீசார் மறுத்ததோடு, முறைப்படி கோர்ட்டில் ஆஜர் படுத்துகிறோம், இதுகுறித்து கோர்ட்டு தான் முடிவு செய்ய முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 34 பேரை கைது செய்து போலீசார், அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்