உறவினர்கள் சாலை மறியல்
சீர்காழி அருகே சமையல் மாஸ்டர் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து உறவினர்கள் கொலையாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே சமையல் மாஸ்டர் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து உறவினர்கள் கொலையாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சமையல் மாஸ்டர் கொலை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெருவை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் கனிவண்ணன் (வயது 27). இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்றுமுன்தினம் இரவு சீர்காழி அருகே உள்ள உப்பனாற்று கரையில் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் அங்கு சென்று கனிவண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்தனர். இதில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் மயிலாடுதுறை- சிதம்பரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தின் போது கனிவண்ணனை கொலை செய்தவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து சீர்காழி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அந்த பகதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஜவகர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.
தனிப்படை
அப்போது அவர், துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் இருந்த கனிவண்ணனின் உடலை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று மாலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அப்போது உறவினர்கள் கொலையாளிகளை கைது செய்யாமல் உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என தெரிவித்தனர். இதன் எதிரொலியாக நேற்று இரவு சிதம்பரம்- மயிலாடுதுறை சாலையில் மீண்டும் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கனிவண்ணனை கொலை செய்தவர்களை கைது செய்யாத போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகுமாரன் அங்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என கூறினார். அதற்கு போராட்டக்காரர்கள் கொலையாளிகளை கைது செய்யவில்லை என்றால் கனிவண்ணன் உடலை அடக்கம் செய்ய மாட்டோம் என தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் மயிலாடுதுறை- சிதம்பரம் சாலையில் நேற்று 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.