மறுவிசாரணை செய்து சசிகலா தரப்பினர் மீது நடவடிக்கை

400 பேர் மிரட்டினார்கள் என்றும், புகார் மீது விசாரிக்காமலேயே முடித்து வைத்துள்ளதாகவும், மறுவிசாரணை செய்து சசிகலா தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சி.வி.சண்முகம் எம்.பி. கூறினார்.

Update: 2023-04-13 18:45 GMT

திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் எம்.பி., திண்டிவனம் ரோஷனை போலீஸ் நிலையத்தில் கடந்த 9.6.2021 அன்று புகார் கொடுத்தார். அந்த புகாரில், சசிகலா தரப்பினர் தனக்கு செல்போன் மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவர்கள் மீதும், இதற்கு தூண்டிய சசிகலா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

அதன்பேரில் 25.6.2021 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என்று கூறி கடந்த 10.12.2021 அன்று போலீசார் முடித்துவைத்தனர்.

சி.வி.சண்முகம் எம்.பி. கோர்ட்டில் ஆஜர்

இதனை தொடர்ந்து சி.வி.சண்முகம் எம்.பி. தரப்பில் மறு விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த 7-ந்தேதி திண்டிவனம் குற்றவியல் நீதிமன்றம் எண்-1-ல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது சி.வி.சண்முகம் எம்.பி. ஆஜரானார். இதனை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கமலா, தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தார்.

மறு விசாரணை செய்ய வேண்டும்

பின்னர் சி.வி.சண்முகம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

சசிகலா தரப்பினர் என்று கூறிக்கொண்டு 300, 400 பேர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீதும், சசிகலாவின் தூண்டுதலின் பேரில் நடைபெற்றதால் சசிகலா மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தேன். இது குறித்து திண்டிவனம் ரோஷனை, சென்னை, விழுப்புரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தேன். அந்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அத்தனை புகார்களின் மீதும் மிஸ்டேக் ஆப் ஆக்ட்(தவறான செயல்) என வேக வேகமாக முடிக்கிறார்கள். இதுவரை 15 புகார்கள் கொடுத்துள்ளேன். ஒரு புகாரிலும் என்னிடம் விசாரணை செய்யவில்லை. எனது செல்போனையும் வாங்கி பார்க்கவில்லை. ஆனால் விசாரணை செய்து வாக்குமூலம் பெற்றதாக போலீஸ் மனு தாக்கல் செய்துள்ளது. எனவே எனது மனுவை மறு விசாரணை செய்து சசிகலா மற்றும் அவரது தரப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்