மீட்பு பணிகள் தொடர்பான ஒத்திகை பயிற்சி

வெள்ள பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்பு பணிகள் தொடர்பான ஒத்திகை பயிற்சி நேற்று நடைபெற்றது.

Update: 2022-09-01 18:16 GMT

ஒத்திகை பயிற்சி

கரூர் மாவட்டம், திருமாநிலையூர் அமராவதி ஆற்றுப்படித்துறையில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பில் வெள்ள பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்பு பணிகள் தொடர்பான ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இதனை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார்.அப்போது அவர் கூறியதாவது:- வெள்ள பேரிடர் காலங்களில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், பொதுமக்கள் அன்றாடம் வீடுகளில் பயன்படுத்தும் எளிமையான பொருட்களை கொண்டு தங்களை காத்து கொள்வது தொடர்பான செயல் விளக்க ஒத்திகையும், மீட்கப்பட்டவர்களுக்கு பொது சுகாதார துறையினர் முதலுதவி செய்து அவசர கால ஊர்தியில் ஏற்றி வைப்பது தொடர்பான மாதிரி செயல்விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கையுடன்...

மேலும் பேரிடர் என்பது எதிர்பாராத நேரங்களில் வருவது தான். எனவே அதில் இருந்து நாம் பாதுகாத்து கொள்ள முன்னெச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். எனவே வெள்ள பேரிடர் காலங்களில் இந்த மாதிரி ஒத்திகையை பார்வையிட்ட பொதுமக்கள் அதேபோல் தங்களையும், சுற்றுப்புறத்தில் உள்ளவர்களையும் பாதுகாத்து கொள்ள வேண்டும். இதைப்போல் மண்மங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட திருமுக்கூடலூர் அகஸ்தீஸ்வரர் கோவில் அருகில் அச்சமாபுரம் கிராமத்திலும், குளித்தலை வட்டத்திற்கு உட்பட்ட வைகை நல்லூர் வடக்கு கிராமத்திலும் மற்றும் கிருஷ்ணராயபுரம் வட்டத்திற்கு உட்பட்ட திருக்காம்புலியூர் கிராமத்திலும் மாதிரி ஒத்திகை நடைபெறுகிறது, என்றார்.

நொய்யல்

இதேபோல் தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் வருவாய்த்துறை சார்பில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இதில், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு வெள்ளத்தில் சிக்காமல் எவ்வாறு மீட்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு மீட்பு தொடர்பான ஒத்திகை செய்து காண்பித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்