மீட்பது குறித்த ஒத்திகை

நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை

Update: 2022-09-01 22:17 GMT

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ள அபாயங்களை தடுக்கும் வகையில் செயலாற்றிட உத்தரவிட்டுள்ளார். அதன்படி நெல்லை தாமிரபரணி ஆற்றில் தீயணைப்பு துறை, வருவாய் துறை, சுகாதார துறை உள்ளிட்ட அரசு துறைகள் இணைந்து வெள்ள அபாய தடுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இதனை நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகரன் தொடங்கி வைத்தார்.

நெல்லை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அதிகாரி கணேசன், துணை அதிகாரி வெட்டும் பெருமாள் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக ஒத்திகையை நடத்தி காண்பித்தார்கள்.

வெள்ளத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வது போன்று ஒத்திகையை நடத்தினார்கள். இதேபோல் மாவட்டத்தில் வள்ளியூர், நாங்குநேரி, அம்பை, சேரன்மாதேவி ஆகிய இடங்களிலும் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மத்திய, மாநில அரசுகள் சார்பில் 'ஆப்தமித்ரா' எனப்படும் ஆபத்தின் நண்பன் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரி ரவீந்தர் பயிற்சி அளித்தார்.

இதுகுறித்து எச்.எம்.எஸ். அறக்கட்டளை கணேசன் கூறுகையில், ''நெல்லை மாவட்டத்தில் ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் கலெக்டர் விஷ்ணு மேற்பார்வையில், தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏற்கனவே முதல் கட்டமாக 150 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது 2-வது கட்டமாக 160 பேருக்கு பயிற்சி தொடங்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு அந்தந்த ஊரில் நடைபெறும் பேரிடர் சம்பவங்களின்போது துரிதமாக செயல்பட்டு மக்களை காப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்