தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை
தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது;
புகழூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக வேலாயுதம்பாளையம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒத்திகை செய்து காட்டினார்கள். அப்போது, மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளின் போது பொதுமக்கள் வீடுகளில் உள்ள பழைய பொருட்களைக் கொண்டு எவ்வாறு மீட்பு பணிகள் மேற்கொள்வது, தீயினால் ஏற்படும் பாதிப்புகளில் எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது போன்ற விழிப்புணர்வு ஒத்திகையை செய்து காட்டினார்கள். மேலும் பல்வேறு வகையான தீ விபத்துக்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்தும் விளக்கினார்கள். தொடர்ந்து மழைக்காலங்களின் போது சாலை ஓரங்களில் மரங்கள் மற்றும் கட்டுமான இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகையும் நடந்தது. இதில் பள்ளி தலைமையாசிரியர், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.