ராமேசுவரம்,
ராமேசுவரம் புது ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் இருந்து நேற்று சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியை நகராட்சி தலைவர் நாசர் கான் தொடங்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய சர்வதேச பேரிடர் குறைப்பு விழிப்புணர்வு பேரணி தனுஷ்கோடி சாலை, சுனாமி காலனி மற்றும் ராமகிருஷ்ணபுரம் கிராமம் வரை சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. தொடர்ந்து புதுரோடு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் முன்பு பேரிடர் மீட்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ராமேசுவரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சகாதேவன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பேரிடர் காலங்களில் சிக்கியவர்களை மீட்பது குறித்து பள்ளி மாணவர்கள் முன்னிலையில் செயல்முறை விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ராமேசுவரம் தாசில்தார் அப்துல்ஜபார், நகரசபை தலைவர் நாசர் கான், துணைத் தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்தி, தாசில்தார் அப்துல்ஜபார், மீன்துறை உதவி இயக்குனர் மணிகண்டன், கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் கவுன்சிலர்கள் முகேஷ்குமார், சத்யா உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேரிடர் மீட்பு குறித்து நடந்த பேச்சு போட்டி, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற 12 மாணவ-மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.