பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டகுழந்தைகளுக்கு மறுவாழ்வுஅளிக்க வேண்டும்
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் சாந்தி அறிவுறுத்தினார்.
ஆய்வுக்கூட்டம்
சமூக பாதுகாப்பு துறையின் தர்மபுரி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பிரமிளா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசியதாவது:-
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும். குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்த அவர்கள் மீண்டும் கல்வி கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகளை பொதுமக்களுக்கு எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கட்டாயம் நடத்த வேண்டும்
ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் அங்கு பிறக்கும் ஆண், பெண் குழந்தைகள் விகிதாச்சாரம் என்ன? என்பதை அறிந்து பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்த வேண்டும். கிராமங்கள் வட்டாரங்கள், நகராட்சி பகுதிகள், டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டத்தை 3 மாதத்திற்கு ஒரு முறை கட்டாயம் நடத்தி பொதுமக்களிடம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த கூட்டத்தில் 27 துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வு, குழந்தைகள் சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உரிய வழிமுறைகள் குறித்து கருத்துக்களை தெரிவித்தனர். கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம், சமூக நல அலுவலர் மற்றும் திட்ட அலுவலர் ஜான்சிராணி, இளைஞர் நீதி குழும உறுப்பினர் சரவணன் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.