வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
வீட்டுமனை பட்டா வழங்கக்கோரியும், வீட்டு வரி வாங்க மறுப்பதை கண்டித்தும் நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
வீட்டுமனை பட்டா வழங்கக்கோரியும், வீட்டு வரி வாங்க மறுப்பதை கண்டித்தும் நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
வீட்டு வரி வாங்க மறுப்பு
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த நாராயணபுரம் ஊராட்சியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆந்திரா மற்றும் தமிழ்நாடு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஜவ்வாது, ராமசமுத்திரம் மலையையொட்டி உள்ள மூலவட்டம், தனிகாலனி, மதுகொள்ளி, மலை வட்டம், பனந்தோப்பு வட்டம், சிந்தகாமணி உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 60 ஆண்டு காலமாக அப்பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இவர்கள் வீட்டு வரி ரசீது, மின் இணைப்பு ஆகியவற்றை பெற்று வந்துள்ளனர். தற்போது ஊராட்சியில் வீட்டு வரி செலுத்த சென்றால் ஊராட்சி செயலாளர் ஜெயசுதா, அந்த இடம் ஆந்திர பகுதிக்கு சொந்தமானது எனவும், எனவே தற்போது அதற்கு வீட்டு வரி வாங்க முடியாது என்று கூறியததாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் முற்றுகை
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வீட்டு வரி பெறக்கோரியும், வீட்டு மனை பட்டா வழங்கக் கோரியும் திடீரென நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி ஒன்றியக் குழு தலைவர் வெண்மதி முனிசாமி மற்றும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இது குறித்து அதிகாரிகளிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.