ஸ்டெர்லைட் ஆலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம்; தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்
சமூக வலைதளங்களில் ஸ்டெர்லைட் ஆலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கூட்டமைப்பினர் ஸ்டெர்லைட் ஆலை மீது கூடுதலான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை (திங்கட்கிழமை) மனு அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு குறித்து சமூக வலைதளங்களில் தவறாக கருத்துகள் பரப்பப்பட்டு வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு கூட்டமைப்பினரிடம் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும் அவர்களிடம் இதுவரை தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், முதல்-அமைச்சர் அறிவித்தபடி நடவடிக்கை தொடரும் என்றும், சி.பி.ஐ. அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடந்த 1½ ஆண்டுகளில் அரசு எடுத்த நடவடிக்கை குறித்தும் தெளிவுப்படுத்தி உள்ளோம். அதன் அடிப்படையில் கூட்டமைப்பை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சுமார் 50 பேர் மட்டும் வந்து மனு அளிக்கிறோம் என உறுதி அளித்து உள்ளனர்.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் சிலர் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். இதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம். ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மட்டுமல்ல, ஆதரவாளர்களும் வதந்திகளை பரப்ப வேண்டாம். ஏனென்றால் இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அதுகுறித்து யாரும் பேச வேண்டாம். மேலும் சமூக வலைதளங்களில் ஸ்டெர்லைட் ஆலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.