பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி தொடர்பாகஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி தொடர்பாக ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தேனியில் நடந்தது.
பேரிடர் நிகழ்வுகளின் போது பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பேரிடர் மீட்பு கூட்டு மாதிரி ஒத்திகை பயிற்சி நடத்துவது குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். தேசிய பேரிடர் மீட்பு படையின் கமாண்டோ அலுவலர்கள் அருண்குமார் சவுஹான், ராகுல்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது, "பேரிடர்களை கையாள்வது குறித்த கூட்டு மாதிரி ஒத்திகை பயிற்சி நடத்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் தேனி வந்துள்ளனர். தேனி, வீரபாண்டி பகுதியில் மாணவ, மாணவிகளுக்கு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட உள்ளது" என்றார். கூட்டத்தில், பெரியகுளம் ஆர்.டி.ஓ. சிந்து, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகன், பேரிடர் மேலாண்மை பிரிவு தாசில்தார் ஆர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.