சென்னிமலை முருகன் கோவில் குறித்து அவதூறாக பேசிய வழக்கு கிறிஸ்தவ முன்னணி மாநில தலைவர் கைது

சென்னிமலை முருகன் கோவில் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கிறிஸ்தவ முன்னணி மாநில தலைவர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-10-18 20:03 GMT

சென்னிமலை முருகன் கோவில் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கிறிஸ்தவ முன்னணி அமைப்பின் மாநில தலைவரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள கத்தக்கொடிக்காடு என்ற இடத்தில் கடந்த மாதம் 17-ந் தேதி கிறிஸ்தவ போதகர் ஒருவர் குடும்பத்துடன் தனது வீட்டில் பிரார்த்தனை நடத்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சிலர் பிரார்த்தனை நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கும், கிறிஸ்தவ போதகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதுகுறித்து அவர் தங்களது குடும்பத்தினரை தாக்கியதாக சென்னிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் கிறிஸ்தவ போதகரை தாக்கிய அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த 25-ந் தேதி சென்னிமலை பஸ் நிலையம் முன்பு கிறிஸ்தவ முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அவதூறு பேச்சு

இந்த ஆர்ப்பாட்டத்தில் கிறிஸ்தவ முன்னணி அமைப்பின் மாநில தலைவரான செங்கல்பட்டு மாவட்டம், வெண்பாக்கத்தை சேர்ந்த சரவணன் (வயது 36) என்பவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், சென்னிமலை முருகன் கோவில் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு முருக பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மேலும் இந்து முன்னணி சார்பில் கடந்த 14-ந் தேதி சென்னிமலை பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சென்னிமலை முருகன் கோவில் குறித்து அவதூறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.

கைது

இதுதவிர அவர் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி ஈரோடு மாவட்ட இந்து முன்னணி செயலாளர் முரளி என்பவர் சென்னிமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் கிறிஸ்தவ முன்னணி அமைப்பின் மாநில தலைவர் சரவணன் மீது மதத்தை அவமதித்தல், சாதிகள் அல்லது சமூகங்களுக்கு இடையே பகை, வெறுப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் சரவணனை அவரது வீட்டில் கைது செய்து சென்னிமலை அழைத்து வந்தனர். பின்னர் நேற்று சரவணனை பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி கோபி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்