அணையின் நடைமேடையில் நடந்து செல்ல அனுமதி மறுப்பு

பேச்சிப்பாறை அணையின் நடைமேடையில் நடந்து சென்று அழகை ரசிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2023-06-11 19:54 GMT

குலசேகரம்:

பேச்சிப்பாறை அணையின் நடைமேடையில் நடந்து சென்று அழகை ரசிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

பேச்சிப்பாறை அணை

குமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் அரண்மனை, திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் பிரதான அணையான பேச்சிப்பாறை அணையையும் பார்த்து ரசித்து விட்டு செல்கின்றனர்.

இந்த அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பேச்சிப்பாறை சந்திப்பில் வாகனங்களை நிறுத்தி விட்டு அணையின் முன்பக்கமாக இருக்கும் படிக்கட்டுகளில் ஏறி அணையின் மேல் பகுதிக்கு செல்வார்கள். பின்னர் அங்கு நூற்றாண்டு விழா ஸ்தூபியின் அருகில் நின்றவாறு அணையை ரசித்து விட்டு செல்கின்றனர்.

அனுமதி மறுப்பு

ஆனால், அணைச்சுவரின் நடைமேடை வழியாக சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டு நடைமேடை பகுதியில் கேட் அமைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் நடைமேடை வழியாக நடந்து சென்று அணையில் நீர்நிரம்பி கிடக்கும் அழகையும், தூரத்தில் தெரியும் மலைத்தொடர்களின் அழகையும் பார்த்து ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

மான் பூங்கா இல்லை

இதுபோன்று அணையின் கரையையொட்டி அமைக்கப்பட்டிருந்த மான் பூங்காவும் இப்போது இல்லை.

இதுகுறித்து சுற்றுலா பயணி ஒருவர் கூறுகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேச்சிப்பாறை அணையை பார்வையிட சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால், அணையின் அழகை ரசிக்க முடியாமல் இங்கு கேட் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. எனவே, கேட்டை அகற்றி உரிய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி சுற்றுலா பயணிகளை அணையின் நடைமேடையில் குறிப்பிட்ட தூரத்திற்கு நடந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்றார்.

பாதுகாப்பு கூண்டு

இதுகுறித்து பேச்சிப்பாறையை சேர்ந்த ஒருவர் கூறுகையில்,

நடைமேடையில் நடந்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித்துறையினர் போஸீஸ் கண்காணிப்பு அறை அருகில் கேட் அமைத்தனர். கேரளாவில் நெய்யாறு அணை உள்பட பல அணைகளின் நடைமேடை வழியாக நடந்து சென்று அழகை ரசிப்பதற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். பாதுகாப்பு இல்லையென பொதுப்பணித்துறையினர் கருதினால் குறிப்பிட்ட தூரத்திற்கு நடைமேடையின் தடுப்புச்சுவர்களில் கம்பியிலான கூண்டு வலை அமைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யலாம். மேலும், அங்கு முன்பு இருந்ததை போல் கூடுதல் பொதுப்பணித்துறை பணியாளர்களையும் நியமிப்பதுடன், ஏற்கனவே இருந்த மான் பூங்காவை மீண்டும் அமைப்பதுடன், முன்பகுதியில் பேச்சியம்மன் கோவிலையொட்டி பூங்காவும் அமைக்கப்பட வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்